Wednesday, December 5, 2012

திற...

நெடுநாட்களாய் நினைவில் ஊறிய பயணம் இனிதே தொடங்கியிருக்கிறது.. அம்மா அப்பாவுடன் அன்னை தியேட்டரில் வணங்காமுடி, காத்தவராயன், உத்தமபுத்திரன் என இரண்டாம் ஆட்டம் நடந்தே போய் பார்த்து பாதியிலேயே துங்கி அப்பா தோள்களில் எச்சிலொழுக வந்தது ‘மழைபட்ட’ நீர்வண்ண ஓவியம் போல் கலங்கலாய் ஞாபகமிருக்கிறது.. அண்ணனுடன் அவரது தோழர்கள் அன்னை ஓர் ஆலயம், ராம் லட்சுமணன், பில்லா, என கதாநாயகர்களின் சாகசத்தைப் பேச பேச அந்தக்கதையை கொண்டு மேலும் சில அயிட்டங்களை சேர்த்து அளந்துவிட்டு வகுப்பில் நல்லபேர் வாங்கியபோது தெரியாது இப்படி ஆகப்போகிறேன் என்று… Bastin சித்தப்பாவின் சைக்கிளின் முன்னே நானும் பின்னே அண்ணனும் james bond -ன் moon racker பார்த்து இரவு திரும்பும்போது சைக்கிளில் லைட் இல்லாமல் போலிஸிடம் சமாளித்ததும் சித்தப்பா ஆங்கிலப்படங்களை எங்கள் மொழியில் மொழிபெயர்த்ததில் ஆரம்பித்திருக்கலாம்… நண்பர்களுடன் கோயில் திருவிழாக்களின் போது சரஸ்வதி சபதம், காதலிக்க நேரமில்லை, உதயகீதம் என விடிய விடிய நான்கைந்து படங்களை நடுத்தெருவில் சாக்கடையின் மணத்தோடு உறங்கி எழுந்து வீடு சென்று திரைவிமர்சனம் செய்ததும்.. Project-A, PoliceStory, Armour of God என படங்கள் பார்த்து இதுதாண்டா படம் என Jackiechan போல் எகிறி குதித்து இடதுகை முறிந்ததில் இன்றும் அண்ணா மேம்பாலம் போல் என் இடதுகை இருப்பதும்… நல்லவனுக்கு நல்லவன், படிக்காதவன், என தொடங்கி மனிதன் வரைக்கும் தீவிர ரஜினி ரசிகனாய் இருந்ததும்.. நாயகனுக்கு பிறகு கமல்ஹாசனை பிடிக்கத்தொடங்கினாலும் மைக்கேல் மதன காமராசனில் தான் அதை ஒப்புக்கொள்ள தோன்றியது… அதன்பிறகு கமல்ஹாசனை ஆதர்சமாகக்கொண்டு அவரது திரைக்கதையில் உருவான அனைத்து படங்களுடன் முதல்மரியாதை, வறுமையின் நிறம் சிவப்பு, மறுபடியும், டார்லிங்.. டார்லிங்.. டார்லிங்..,முள்ளும் மலரும், பிதாமகன், தவமாய் தவமிருந்து ,கற்றது தமிழ், வேட்டையாடு விளையாடு,ஆடுகளம், அங்காடித்தெரு, யுத்தம் செய்…,. என்றும், காயத்ரியின் நண்பர் வெங்கட் சொன்னதில் shasawnk redemption, usual suspects, sixth sense, seven, eternal sunshine of the spotless mind… என சினிமாவே நிறைய இருக்கிறது என்னுள்… சினிமா பார்க்கப்பிடிக்கிறது பண்ணப்பிடிக்குமா, திரைக்கதை எழுத வருமா என யோசித்துக்கொண்டே இருந்தேன்.. நண்பர் நாசர் நெருப்பில் எண்ணை ஊற்றிக்கொண்டே இருந்தார்..கனன்றுகொண்டே இருந்தது.. முதல் குறும்படம் திரைக்கதை எழுதி படமும் எடுத்து முடித்துவிட்டேன்.. மகள் நிறையைப் போல நானும் சினிமாவில் ukg- யில் இருக்கிறேன்..போகவேண்டிய துரம் நிறைய இருக்கிறது.. எனினும்… நெடுநாட்களாய் நினைவில் ஊறிய பயணம் இனிதே தொடங்கியிருக்கிறது..