மாலை நேர வீடு /யூமா.வாசுகி
ஒரு சின்னஞ்சிறுமி எதிர் முற்றத்தில்
அமர்ந்திருக்கிறாள் தனியாக.
நான் அஸ்திவாரம் தோண்டினேன்
வேடிக்கையாக யாரோ அவள் முகத்தில்
பூசியிருந்த சிவப்பு சாந்தைக் கண்டு
நிதானித்த பூனை பட்டென்று பயந்தோடியது
அவள் சிரித்தாள்- இப்பகுதிக்குழந்தைகளிடயே
மிக அழகாக சிரிப்பவள் அவள்
அப்போது உருவான கற்களைகொண்டு
அஸ்திவாரத்தின்மீது கட்டத்தொடங்கினேன்.
மட்டையும் பந்துமாய் சிறுவர் குழாம் வந்தது
தொடங்கிய விளையாட்டின் உற்சாகத்தில்-மேலும்
பிள்ளைகள் வந்துசேர்ந்தனர் அக்கம்பக்கத்திலிருந்து.
சிறுகச்சிறுக உருவானது என் வீடு.
எழும்பின கூச்சல் புழுதிப்பபுகை.
அந்த இரட்டைச்சடைக்காரி இருக்கிறாளே ,
அவளின் சாதாரணப் பிரகாசம் இப்போது மகிழ்ச்சியில்
பன்மடங்காய்ப் பெருகுகிறது.பாருங்கள்,
நடக்கவே தெரியாத ஒருவன்
தத்தித்தள்ளாடி வருவதை
இடையைப் பக்கவாட்டில் சற்றே சாய்த்துக்கூனி
கைவிரல்களைப் பொருத்தமில்லாமல் விரித்துமடக்கி
கருப்பு அழகுச்சிறுமியிடம் எதையோ
அற்புதமாகச் சொல்கிறான்.
என் வீடு பூரணமாய் உருவாகிவிட்டது.
மிக விசாலமான துாய்மையான வீடு.அதி்ல்
சிரிப்பதே செயலானவள் செல்வம் சேர்க்கிறாள்.
பந்து மட்டையில் படும்போதெல்லாம் ஊடுறுவும்
பேரிரைச்சலுக்கு வீடு நெளிகிறது கூச்சத்துடன்.
பந்து பயணி்க்கும் திசைகளில் கூட்டமாய் ஓடும்
குழந்தைகளை நோக்கியே தன் வாசலை
அடிக்கடி திருப்பிக்கொள்கிறது.
அவர்களின் வழக்குகளி்ல்,வசவுகளில்
புதுப்புது அறைகள் உண்டாயின.
ஆட்டத்தி்ல் குழப்பம் விளைவிக்கவே ஆர்ப்பரிப்புடன்
மாடியிலிருந்து இறங்கிவருகிறான்
தடியன் என்று பெயரெடுத்தவன்.
ஒவ்வொருவரையும் ரகசியமாய் அழைத்து
எள் கையிலிருந்து
சாக்கலேட்டுகளை உண்ணச்செய்கிறேன்
என் விரல் முனைகளில் பட்ட எச்சிலினால்
இளங்குளிருடையதாயிற்று என் வீடு.
மாலை முடியும் நேரத்தில்
கரும்பு திங்க வீட்டுக்குப்போறேன்
என்று விடை பெற்றாள் ஒருத்தி
வீடு என்ற சொல்லே விளையாட்டை முடித்தது.
என் வீட்டின் பகுதிகள் பிரிந்து பிரிந்து ஆயாசமாய்
அதனதன் வீட்டிற்குப் போயின-நான்
கதவைத் தாழிட்டுக் கொண்டு
வெட்டவெளியில் அமர்ந்தேன்.